நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, August 31, 2009

காதல் அறிவித்தல்




தானே பின்னிய வலைக்குள்
வெளிவருதலறியாது சிக்குண்டபோதும்
அது தவம் நோற்பதாய்ச் சொல்லப்பட்டது சிலந்தி
நெடுநேர‌மாய் ந‌ட‌ந்துகொண்டிருக்கும்
பாலைவ‌ன‌த்துப் ப‌ய‌ணிக்குச்
ச‌ப்பாத்திக்க‌ள்ளியின் இலைக‌ளில்
தேங்கியிருக்கிற‌து அவ‌னேய‌றிந்திராத‌
அவ‌ன் தாக‌த்திற்கான‌ நீர்
ஊதுப‌த்தி ம‌ண‌மும், ச‌ம்ப‌ங்கி வாச‌னையும்
ஒரு சிறுவிள‌க்கின் வெளிச்ச‌மும்
ப‌ர‌வும் ப‌ர‌ப்புக்குக் கீழே
ஒரு ம‌னுச‌னோ ம‌னுசியோ
புதைக்க‌ப்ப‌ட்டிருக்க‌வும்கூடும்

இன்று இதையெல்லாம் நினைத்துக்கொள்வ‌த‌ற்கு
பெரிதான‌ கார‌ண‌ங்க‌ள் வேறொன்றுமில்லை
அவ‌னும் அவ‌ளும் காத‌லிக்க‌த் தொட‌ங்குவ‌தாக அறிவித்திருப்ப‌த‌ன்றி

Thursday, August 27, 2009

வாழும் கலை




கடலின் மடியில் கட்டிவைத்திருந்த காற்று
அவிழ்ந்து சுழன்றதில்
பூமி நின்று சூரியன் சுற்றத் தொடங்குகிறது
அந்த ராத்திரியின் ரகசியங்கள் பீறிட்டுத் தெளித்த‌
பயத்தில் நனைந்துகொன்டிருக்கிறது
அவ்விஞ்ஞானியின் டைரி
எல்லாம் க‌லைந்துகிட‌க்கும் அந்த‌ இட‌ம்தான்
தான் ச‌னித்த‌ இட‌ம் என்கிறான் ஹிட்ல‌ர்
சூட்சுமம் புரியாத வெளியொன்றில்
பசியால் தவித்த கர்ப்பிணி
பிள்ளையைப் பிரசவித்துத் தின்னத் துணிகிறாள்.

Thursday, August 20, 2009

கண்ணுல பட்டாக் கரிக்குமா? புருவத்துல பட்டாக் கரிக்குமா?.......அய்யங் கதை 3



அய்யங் கதை எழுத ஆரம்பிச்சதில இருந்து நெறையா இல்லைன்னாலும் கொஞ்சமாவது நம்மூருப் பக்கத்துச் சொலவடைகள் மூளைல எங்கயோ ஒரு ஆழத்துல இருந்து வெளிய வரத்தான் செய்யுது. இன்னிக்கு நெனச்சுக்கிட்டது "கண்ணுல பட்டாக் கரிக்குமா? புருவத்துல பட்டாக் கரிக்குமா? ங்கற பழமை ஒன்னப் பத்தி. அது வேற ஒன்னுமில்ல, உங்களுக்கொரு நல்லதுன்னாலோ, கெட்டதுன்னாலோ ஆனந்த உணர்ச்சி அல்லது கவலை உணர்ச்சியில தண்ணி உடறது எதுன்னு பாத்தாக் கண்ணு தான? அதுக்குக் கொஞ்சந்தே மேல இருந்தாலுமே புருவத்துக்கு என்ன உணர்ச்சி இருக்கப்போவது? உங்கமேல உசிர வெச்சிருக்கற ஒறவுக கண்ணு மாதிரி, மத்ததெல்லாம் புருவம்போலத்தான்னு வைங்க. உங்களுக்கு ஒன்னச் செய்யறதுல கண்ணை அடிச்சுக்க முடியாது புருவம்.

நம்ம பேப்பி கல்யாணமாகிப் புருசனுடைய‌ அம்மாயாத்தாவ‌ப் பாத்துட்டுப் பொண்ணும் மாப்பளையுமா தன்னோட அம்மாயாத்தாலையும் பாக்கப் போனா. அப்பிடிப் போய்ட்டு வந்தன்னைக்கு இந்தப் பழமைய நெனச்சுக்கிட்டா "கண்ணுல பட்டாக் கரிக்குமா புருவத்துல பட்டாக் கரிக்குமா?" ன்னு. பேப்பின்ன ஒடனே அதே பேபி அதுக்கு ஒரு கல்யாணம்ங்கறா, ஒருவேளை வெளையாட்டுக் கல்யாணம்னு நெனச்சிக்காதீங்க. பசங்களுக்கு "ராசு" மாதிரி நம்ம பக்கத்துல பொட்டப் புள்ளைகளுக்குச் செல்லப் பேருதான் இந்த "பேப்பி" கொழந்தையா இருந்தப்பச் செல்லமா நம்மாத்தா எல்லாம் இப்படி இங்கிலீசுல கூப்பட ஆரம்பிச்சுப் பல புள்ளைகளுக்கு வெச்ச பேரு மறந்து இதே நெலச்சும் போயிரும். ஒரே ஊட்டுல ரெண்டு மூனு பொட்டப் புள்ளைக பொறந்தாலுங்கூட வஞ்சனை எதுவும் இல்லாம பெரிய பேப்பி, நடுப் பேப்பி, சின்னப் பேப்பி ன்னு அதே செல்ல வரிசைல கூப்புட்டுக்குவாங்க. அப்பிடிப் பாத்தா எங்கூருல இப்பக் கூட ஒரு அம்பது அம்பத்தஞ்சு வயசுலெல்லாம் "பேப்பி" மாருக இருக்கறாங்கன்னு வைங்க. இன்னிக்குக் கதையில வர்ற பேப்பிக்கு ஒரு 25 வயசுதான் ஆச்சு.


அவளுக்கு ரெண்டு வயசா இருக்கறப்ப அவங்கம்மா தன்னோட தாய் தகப்பங்கிட்டத் தூக்கீட்டு வந்தவதான் அப்பறம் பேப்பி இங்கயேதான் வளந்தா. யாரும் அனுப்பலைன்னு சொல்லலை. பேப்பியோட அம்மாவுக்கு கட்டிக்கொடுத்த ஊட்டுல சோகிரீயம் (சௌகரியம்)இல்லை. சுமாரான எடத்துல இருந்து ஒசத்திக்குக் குடுத்தாங்க, கொஞ்ச நாள்ல பணக்காரத் திமிரக் காட்ட ஆரம்பிச்சிட்டாங்க "அது கொண்டாருலை, இது கொண்டாருலை உங்க அப்பன் ஊட்டுல இருந்து" ன்னு சொல்லிக்காட்டிக்கிட்டு. பொறுத்துப் பொறுத்துப் பாத்துட்டு பேப்பியோட அம்மாயாத்தா தன் மக கிட்டச் சொல்லீருச்சு "சரி, எசையிலன்னா வந்துரு" ன்னு. அப்பிடி வந்த பேப்பிக்கு நெனவு தெரியறதுக்கு முந்தியே அவளோட அப்பிச்சி "கிளிய வளத்துக் கொரங்கு கையில கொடுத்த மாதிரி மக பொழப்பு இப்பிடி ஆயிப்போச்சே!" ங்கற கவலையிலயே போய்ச் சேந்திருச்சு. கவலைன்னா சும்மா இல்லை, பக்கவாதமாட்ட வந்து பாக்காத ஆசுபத்திரி இல்லை, காட்டாத கைவைத்தியருக இல்லை, எல்லாம் பாத்தும் கெடையிலயே ஒரு வருசம் படுத்திருந்துட்டுக் கண்ணை மூடிருச்சு. பட்ட மரமா பிஞ்சத் தூக்கீட்டு வந்த மகளையும், கல்யாணமாகாத ரெண்டு பசகளையும், கெடையில கெடந்த அய்யனையும் பாத்துக்கிட்டு, அய்யனைப் பாக்க வந்த சனத்துக்கெல்லாம் சோறு தண்ணியும் ஆக்கிப் போட்டுக்கிட்டு கையில‌ இருந்த காசெல்லாம் தீந்து கடனும் வாங்கிக்கிட்டு ஆத்தா பட்ட சீராழுவுக்கு (சீரழிந்த வாழ்வு)அளவுமில்லை, மதியுமில்லை.


அப்பிடிச் சீராழ்ஞ்சுமே கடைசில எல்லாம் ஆத்தா தலையில போட்டுட்டு அய்யன் எதையுங் கண்ணுல பாக்காமப் போயே போய்ட்டாரு. ஆத்தா பொம்பளைன்னாலும் படு சாமார்த்தியம். ஏன் பொம்பளைன்னா சாமார்த்தியம் இருக்கக் கூடாதுன்னு இருக்குதா? நம்மூருல இப்பிடித்தான் பேசிக்குவாங்க ஆத்தாவப் பாத்து. வேறென்ன ஆண்டாண்டு காலப் பழக்கந்தான். அய்யன எடுத்துக் குடுத்துட்டுப் பதனாறாவது நாள்லயே பொழைக்கற வழி சொல்லிக் குடுத்துது ஆத்தா பசங்களுக்கு. "இந்தாங்கடா உங்கய்யனே போனப்பறம் நாங் கழுத்துல போடாதது எங் கையில எதுக்குக் கெடக்குது? கொண்டுபோய் வித்துட்டு வந்து கெணத்த இன்னங் கொஞ்சம் ஆழமா வெட்டுங்கடா ஆளக் கூட்டியாந்து, தென்ன மரத்த உசிரு போகாமக் காப்பாத்தோனும், இல்லைன்னா கஞ்சிக்கும் வழியில்லாமப் போயிரும்" அப்பிடீன்னு தாலியக் கழட்டிக் குடுத்தனுப்புச்சு பசங்ககிட்ட.


கையில பேப்பியோட நின்ன மகளப் பாத்து "அழுதழுது பெத்தாலும் அவதாம் பெக்கோனுங்கற மாதிரி நம்ம பொழப்ப நாமளேதான் கரையேத்தனும், எதுக்கு அழுதுக்கிட்டுக் கெடக்கறே? வேணும்னு இருந்தா உம் புருசன் வந்து உன்னையும் புள்ளையும் கூட்டிக்கிட்டுப் போவான், இல்லைனா ரெண்டு பசங்களோட மூனாவதா நீயுங் காட்டுல பாடுபட்டு உம் புள்ளையும் வளத்து, உங்கப்பன் நம்மளுக்கெல்லாம் காட்டை வெச்சுட்டுத்தான செத்திருக்குது?" ன்னு தைரியம் சொன்னதும் ஆத்தாதான்.


எது நின்னாலும், நிக்காட்டியும் சூரியன் உதிக்கறதும், மறையறதும் நிக்கவா போகுது? அதுக்குப் பொறவு கையுங் காலும் மொளச்ச மாதிரி ஓடுன காலத்துக்கு ஈடுகுடுத்து ஆத்தா பொழப்பும் ஓடுச்சு. சும்மா சொல்லக் கூடாது மகனுக ரெண்டுபேரும் ஊனக் குடுத்து, உசிரக் குடுத்து ராப்பகலாப் பாடுபட்டாங்க. மகளும் அப்பிடித்தான். பொற‌ந்தவன் ரெண்டு பேரும் காடாக் கெடந்த மண்ணை உழுது உழுது தோட்டமாக்குனாங்கன்னா மக ஆளுகளச் சேத்துக்கிட்டு வெறும் கல்லாக் கெடந்த குட்டைகள போட்டது வெளையற பூமியாக்குனா.(தோட்டத்துக்குள்ள உத்திகளால சூழப்பட்ட ஒரு சிறு பரப்பளவக் குட்டைன்னு சொல்வாங்க, இது தண்ணி நிக்கற கொளம் அல்ல. ஆனா மழை கனமாப் பேஞ்சா இந்தக் குட்டைகள்லயும் தண்ணி தேங்கி நிக்கும். உத்தின்னா என்னன்னா கொஞ்சம் ஏரியாட்டமாப் போடப்பட்ட பெரிய வரப்பு)


எல்லாருக்கும் வேளைக்குச் சோறாக்கிப் போடறதும், ஆடு, மாடு, எருமைன்னு வாயில்லாச் சீவனுகளோட வயித்த நெறைக்கறதும் கூடவே பேப்பிக்கு வயிறு, மனசு ரெண்டையும் நெறைக்கறுதும் ஆத்தாதான். படிக்கர நேரம்போக மத்த எல்லா நேரத்துலயும் பேப்பி ஆத்தா பொறவாலதான் குட்டி போட்ட பூனையாட்டச் சுத்திக்கிட்டிருப்பா. அவசோட்டுப் புள்ளைக மேலகூட அவளுக்கு ஒரு பெரிய சினேகம் வளந்ததில்லை. ஏன்னா அவளுக்கு ஆத்தா எல்லாமாவும் இருந்தது. ஆத்தா சொல்ற கதையே பேப்பிக்கு இப்படித்தான் ஆரம்பிக்கும், "நீ நல்லா நடந்து பழகியிருந்தே, அப்பிச்சி அப்பத்தான் கெடையில உழுந்துது, எந்திரிச்சு நடக்க முடியாத அப்பிச்சிக்குப் பொவைல (புகையிலை) கொண்டுபோய் நாங்குடுக்கறதப் பாத்துக்கிட்டே இருந்துட்டு, நீயும் அதேமாதிரி எடுத்துக்கிட்டுப் போயி அப்பிச்சிகிட்ட ஆஆன்னு சொல்லி வாயில போட்டுட்டு வருவே, அப்பிச்சி செத்தப்பக்கூட எனக்கு அத்தன‌ அழுவாச்சி வல்ல‌, ஆனா அப்பிச்சி செத்த பொறவும் நெறையா நாளு நீ அதேமாதிரி அவியளப் படுக்க வெச்சிருந்த தெக்குவாசூட்டுக்குள்ள பொவையிலையக் கொண்டுக்கிட்டு போயி ஆஆன்னு சொல்லிக்கிட்டு இருப்பே, அதப் பாத்தாத்தான் எனக்கு கண்ணுல தண்ணி நிக்காது, என்ன பண்றது உங்கிட்டப் பொவையிலை வாங்கிப் போட்டுக்கறதுக்கு இன்னங் கொஞ்ச நாளைக்கு உங்கப்பிச்சிக்குக் குடுத்து வெக்கல" அப்பிடீன்னு ஆத்தா எப்ப்டியும் பேப்பிகிட்ட அவ சின்னப் புள்ளையா இருந்த காலத்துல ஏன் அவ காலேஜு போர வரைக்குமே மாசத்துல ஒருக்காச் சொல்லீரும். ஒரு பத்துப் பதனஞ்சு வயசுவரைக்கும் ஆத்தா சொல்லிக்கிட்டு அழுதுதுன்னா கூடவே பேப்பியும் அழுதுருவா.அப்பிச்சிங்கற ஒறவு அப்பிடி உழுந்ததுதான் பேப்பி நெஞ்சுக்குள்ள, வெற ஒன்னும் தெரியாது.


ஆனா ஆத்தாங்கறது பேப்பிக்கு ஒரு தோழி ஒறவு மாதிரி சொகமானது. அப்பவெல்லாம் ஊருகள்ல குமினி ன்னு ஒன்னு இருக்கும். பாக்கறதுக்கு வெள்ளைச் சோளத்தைவிடக் கொஞ்சம் பெருசா பளபளன்னு மேல ஒரு கறுப்பு நெற வட்டமும், கீழ்ப் பகுதி பெருசா செவப்பு நெறத்துலயும் இருக்கும். காடு தோட்டத்துல வேலிகள்ல படந்து கெடக்குற கொடி ஒன்னுல புடுச்சிருக்கற காய்ல இருந்து கெடைக்கும் இது. மழை கிழை பேஞ்சு நல்ல செழுசெழுப்பமா இருக்கற காலத்துல நெறையா வரும். காய் காஞ்சு வெடிச்சு அதுக்குள்ள இருக்கற குமினியெல்லாம் வேலியோரத்துல கீழ உழுந்தும் கெடக்கும். பாக்கறதுக்கு அழகான இந்தக் குமினிகளைப் பொறுக்கிச் சேத்தி வைக்கறதுல பேப்பிக்கு ரொம்ப இஷ்டம். அவளோட அம்மாக்காரிதான் சத்தம் போட்டுக்கிட்டே கெடப்பா. குமினிய அரைச்சுக் குடிச்சா செத்துப் போயரோனும்னோ என்னமோ கதையிருந்துதுன்னு நெனைக்கறேன். பேப்பிகிட்ட அதைத் தூக்கிப் போடச் சொல்லிக் கிட்டே இருப்பா.ஆனா ஆத்தா "வாயில மட்டும் போட்றாத மொட்டுக் குட்டி, வெளையாடீட்டுத் தொட்டில(தேங்காத் தொட்டி) போட்டு வெச்சிரு" ன்னு சொல்லும்.பேப்பிகூடச் சேந்து சின்னப் புள்ளையாட்டமா அதும் குமினி பொறுக்கிப் பேத்திக்குக் குடுக்கும். பேப்பிக்கு தன்னோட அம்மா எதிரியானதும், ஆத்தா தோழியானதும் இப்படித்தான்னு வைங்க.


அதுமட்டுமில்லாம பக்கத்தால டவுனுல எதோ சர்க்கஸ் ஓடுதுன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்கன்னா சின்னப் புள்ளையான பேப்பிக்குப் போக ஆசையா இருக்கும். போனா ஆனை, சிங்கமெல்லாம் பாக்கலாம்னு. பின்ன மிருகக்காட்சி சாலைக்கெல்லாமா கூட்டிக்கிட்டுப் போகப்போறாங்க அவளை? ஆனா பேப்பியோட அம்மா ஊருக்குள்ள சில குடும்பங்களோட சேந்துக்கிட்டு சர்க்கஸ் பாக்கப் போனாலும் ராத்திரில பேப்பி தூங்குன பொறவு கெளம்பிப் போயிரும். அம்மாவுக்குப் புள்ளை தூக்கத்த கெடுக்கக் கூடாதுன்னு. ஆனா மவளுக்கு "அம்மா ஏன் இப்படி ஏமாத்தறா? ன்னு. ஆனை, சிங்கம் பாக்க முடியாத வெசனத்தை பேப்பி ஆத்தாகூடக் காட்டுக்குள்ள சுத்தி மொசலு (முயல்) அழகுவண்ணாங்குருவி(அழகுவண்ணக் குருவி), நாய், நரியெல்லாம் பாத்து ஆத்திக்குவா. இதையெல்லாம்விட மழைபேஞ்ச காத்தால ஆத்தாகூடக் கேளாம் புடுங்கப் போறது (காளான்) பேப்பிக்கு உலக மகா சந்தோசம். கொடை கொடையா விரிஞ்ச கேளான், மொட்டு மொட்டுக் கேளான் எல்லாங் கொண்டாந்து தண்ணிய ஊத்திக் கழுவீட்டு உப்பு, மொளவடியோட‌ பெரிய வாக்கணக் கரண்டியில போட்டு எண்ணெய நெறையா ஊத்தி வறுத்துக் குடுக்கும்பாரு ஆத்தா, பேப்பிய அன்னைக்குக் கையிலயே புடிக்க முடியாது. வறுத்த கேளானுல இருந்து வடிஞ்சு போற எண்ணையையுங்கூடச் சொட்டுச் சொட்டாத் தொட்டு நக்கீட்டு மறுபடியும் மழை வராதான்னு பாத்துக்கிட்டிருப்பா பேப்பி. வேற எதுக்கு? அப்பறமும் ஆத்தாகூடக் கேளாம் புடுங்கப் போறதுக்குத்தான்.


இப்படித் திங்கற விசயத்தோட பேப்பிக்கு ஆத்தாவோட வேலை முடியாது. அதுக்குத் தகுந்தளவு அறிவையும் ஊட்டுச்சு. புஸ்தகம் பாத்துப் படிச்சுக் காட்டி, வெரலப் புடுச்சு எழுதியுட்டாத்தான் படிப்புச் சொல்லிக்குடுக்கறதா என்ன? வாயில சொல்லியே மூளைய வேலைவாங்கும் ஆத்தா. அப்பப்ப விடுகதை சொல்லும். பேப்பியோட மாமனுக ரெண்டுபேரும் பாடுபட்டுட்டு வந்துட்டு ரேடியோவுல சலுப்புத்தீரப் பொழுதோட பாட்டுக் கீட்டு கேட்டுகிட்டு இருப்பாங்க. பேபியோட அம்மாவுக்குச் சட்டிபானை வேலை சரியா இருக்கும். ஆத்தா வெளிவாசல்ல குளுகுளுன்னு காத்து வருதுன்னு கட்டலப் போட்டுப் படுத்திருக்கும். அம்மாவுக்குப் பயுந்துக்கிட்டு தூங்கப் போரவளாட்ட நடிச்சிட்டு பேப்பி அழுங்காம வெளிவாசலுக்கு ஆத்தாகிட்டப் போயிருவா. நெலாவும் இருந்ததுன்னா அன்னைக்குக் கேக்கவே வேண்டாம். பேப்பியோட பெரியப்பிச்சி ஊட்டுப் பேரனுகளும் ஆத்தாகிட்ட வந்துருவாங்க. ஆரம்பிக்கும் ஆத்தாவோட விடுகதை வகுப்பு. பேத்தியும், பேரனுகளுமா தமிழ்ப் புசஸ்தவுத்துல படிச்ச "பச்சை நிறமா இருக்கும், பால் வடிந்துகொண்டிருக்கும்" னு எதோ தமக்குத் தெரிஞ்சதை எடுத்து ஆத்தாகிட்ட உடுவாங்க. எந்தப் படிப்பு வாசனையும் இல்லாட்டியும் எல்லாத்தையும் சுலபமாக் கண்டுபுடிச்சிரும் ஆத்தா. அப்பறமா அதோட மொறை வந்தா படுத்துக்கிட்டு இருந்தது எந்திரிச்சுக் குடுமைய நீவி நல்லாப் போட்டுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே ஆரம்பிக்கும்.

எங்கே சொல்லுங்க பாக்கலாம்? "சலசலங்குது ஒரு குருவி, சங்கிலி போடுது ஒரு குருவி, கொத்திக் குடுக்குது ஒரு குருவி, கொறிச்சுத் திங்குது ஒரு குருவி" இதே என்னோட கதை, விடுவியுங்க பாக்கலாம்?" னு கேக்கற ஆத்தாதான் பதிலையும் சொல்லவேண்டி வரும் சில நேரங்கள்ல. "எண்ணெய் சலசலன்னு கொதிக்கும், சங்கிலியாட்டச் சுத்திப் புழியுவோம். ஒரு கைல எடுத்து வாய்க்குக் குடுப்போம், பல்லு கொறிச்சுக் கொறிச்சுத் திங்கும், முறுக்குத்தான் அது" ஆத்தா விளக்கத்தோட சொல்லும். "ஊளை மூக்காஞ் சந்தைக்குப் போறான் அது நொங்கு", "கெண‌த்து நெறையாத் தண்ணி இருக்குது, குருவி குடிக்கத் தண்ணியில்லை அது எளநீ (இளநீர்)," "எத்தனை அடி போட்டாலும் ஒரு சொட்டுக் கண்ணீரு உடமாட்டா அது ஒல்லு(ஒரலு)" இப்படி ஆத்தா சொல்ர விடுகதைக்குப் பேப்பி எப்பவுமே ரசிகையாப் போனா. வளரவளர எல்லாமுக்குமே விடை சொல்லவும் பழகீட்டா.


பேப்பிய கடைசிவரைக்கும் ஆத்தாதான் வளத்துச்சு. அவ பெரியவளானபோதுங்கூட ஊருக்குள்ள எல்லாரும் "மாமனுக ஒருத்தனக்கே கட்டி வெச்சிருங்க உங்களுக்கும் பேத்தியே மருமவளா வந்தாக் கொறை இருக்காது"ன்னு சொன்னாங்க‌.ஆத்தாவுக்குக் கோவம் வந்து "எல்லா பேசறீங்க பாரு நாயம்! பெத்த புள்ளையாட்ட வளத்தீட்டு அவனுக எப்பிடிக் கட்டிக்குவாங்க? வேற நல்ல நாயம் இருந்தாப் பேசுங்க" ன்னு வார்த்தை பேசியுட்டுருச்சு.
பேப்பியோட மாமனுகளுக்கும் கல்யாணம் நடந்துது. அத்தைமாருக வந்தகையோட பண்ணையம் பாச்சல் எல்லாம் பங்குபோட்டுப் பிரிச்சாச்சு. இத்தனை நாளும் ஒன்னும்பின்னா இருந்தது போதும், இனி நங்கை கொழுந்திக்குள்ள எதுக்கு இருக்கோணும்னு காலேசுல சேந்த பேப்பியக் கூட்டிக்கிட்டு மகளும் தனியாப் போய்ட்டா. "நானும் அம்மாளும் மட்டுந்தான இருக்கப்போறோம்? நீங்க வந்து எங்ககூட இருங்காத்தா" ன்னு கூப்பிட்டா பேத்தி. ஆனா மருமவளுகளுக்குக் கெட்ட பேரு வரும்னு ஆத்தா வரலை. அப்பப்ப மருமகளுக மேல குத்தங் குறை சொன்னாலும் மகனுகள உட்டு நகராது. பேப்பிய வளத்துன மாதிரி மகனுக பேத்திகளையும் வளத்துச்சு.

படிச்சு ஒரு வேலையும் கெடைச்சு பேப்பி தலைதூக்கினபொறகு மாமங்காரங்க அவளுக்கு மாப்பளை பாக்க ஆரம்பிச்சாங்க. ஆனா பேப்பி அவ தொணைய அவளே தேடிக்கிட்டா. பெரியவங்களே பண்ணி வைங்கன்னு கேட்டப்ப சின்ன மாமன் "சொத்து ஒன்னுமே பெருசா இல்லையாட்ட இருக்குது, அங்க கட்டிக்குடுத்து என்ன பண்றது?" ன்னாரு. "ஏன்டா உங்களுக்கெல்லாம் ஒரு குடி கெட்டுங்கூடப் புத்தி வராதா? இன்னமு ஏன்டா சொத்து சொத்துனு அலையறீங்க? நம்ம புள்ளைய மனங் கோணாமப் பாத்துக்குவாங்களான்னு மட்டும் பாருங்க" ஆத்தா ஒரு ஏறு ஏறுன பொறவு பேப்பி கல்யாணம் நல்லாவே நடந்துது.

கல்யாணம் ஆகி ஒரு மாசம் போயிருக்கும். ரெண்டுபேரும் ஊருப்பக்கம் போய்ட்டு அம்மாயாத்தாக்களையும் பாத்துட்டு வரலாம்னு போயிருந்தாங்க. பேப்பி புருசனோட அம்மாயாத்தா வாஞ்சையாத்தான் பேசுச்சு. ஆனாலுங்கூட பேப்பிக்கு என்ன வேணும்னு கேட்டதைவிட "எனக்கு அந்தத் தயிரக் கொஞ்சம் சூடு பண்ணிக்குடாத்தா, அப்பிடியே ஊத்திக்கிட்டா சளி புடுச்சுக்கும், காப்பியில எனக்குப் பாலு இன்னங் கொஞ்சம் ஊத்தோனுமாத்தா, கரையேன்னு (கருப்பா) கெடக்குது காபி, பால் பத்தலை" னு பேப்பிகிட்டத்தான் நெறையா வேலை வாங்கீட்டு இருந்துது. பையன் மூலமா எந்தப் பொண்ணு ஊட்டுக்கு வந்தாலும் அது மருமவளா இருந்தாலுஞ்சரி, பேரம் பொண்டாட்டிகளா இருந்தாலுஞ்சரி அவங்களைக் கொஞ்சம் ஏவி வேலை வாங்கற தோரணை நம்ம ஆத்தாக்களுக்கும் இருக்கத்தான் செய்யுதுனு வைங்க.


அப்பறமா பேப்பியோட ஆத்தாவையும் பாக்கப் போனாங்க. வருவாங்கன்னு தெரிஞ்சு வாசல்லயே உக்காந்துக்கிட்டு இருந்துது ஆத்தா. பைக்க உட்டு எறங்குனதீமு பேத்தியப் பாத்துக் கேட்ட கேள்வி, "ஏத்தா மத்தியானமே வருவீங்கனு பாத்துக்கிட்டு இருந்தேன், அத்தையச் சாப்பாட்டுக்கு வடைபாயாசங்கூட வெக்கச் சொல்லீருந்தேன், இன்னாரமாயிப்போச்சா?" "ஆமாங்காத்தா லேட்டாயிருச்சு"னு சொல்லீட்டு உள்ள போயி எல்லாருகிட்டயும் பேசிக்கிட்டிருந்தாங்க. ஆத்தா மட்டும் எங்கயோ எந்திரிச்சுப் போச்சு. போயிட்டு வரும்போது ரெண்டு சின்னச் சின்னத் தட்டத்துல என்னத்தையோ எடுத்துக்கிட்டு வந்து பேப்பிகிட்டக் குடுத்துது. பாத்தாக் கேளான் வறுவல். புருசங்கிட்ட ஒன்னக் குடுத்துட்டு நெஞ்சு முழுக்கா ஈரத்தோட அதைச் சாப்பிட்டா அவ. ஆத்தாவோட சின்ன மவன் கேட்டாரு, "இதை எப்பம்மா புடுங்கியாந்து வறுத்து எங்கயம்மா வெச்சிருந்தே? மத்தியானம் சாப்புடும்போது எங்கண்ணுலக் கூடத் தட்டுப்படலியே?". "இப்பவெல்லாம் மின்னையாட்ட (முன்புபோல)எங்கீடா மொளைக்குது? அந்த ஒத்தப் பனைமரத்துக்கிட்ட ரெண்டே கேளாந்தாங் கெடச்சுது. பேப்பிவாரான்னு வெச்சிருந்தேன், காட்டுனா உனக்கு நாக்கடங்காது, புள்ளைக்கிருக்காது. நாளைக்கு எங்கயாவது புடுங்கீட்டு வா தின்னாப் போவுது" மவன் வாயை ஒரே அடக்கா அடக்கீருச்சு ஆத்தா. புருசங்கார ஆத்தாவையும், தன்னோட ஆத்தாவையும் மனசுக்குள்ள வெச்சுப் பாத்து "கண்ணுல பட்டாக் கரிக்குமா? புருவத்துல பட்டாக் கரிக்குமா?" ன்னு நெனச்சுக்கிட்டா பேப்பி.

Sunday, August 16, 2009

நேற்றும் இன்றும்




நேற்றுவரைகூட அது அங்குதான் இருந்தது
தடித்த பருமனை உடலாகக் கொண்டு
எல்லாவற்றிற்கும் மௌனசாட்சியாய்

உண்ட உணவும்
செரிக்க நடக்காத சீமாட்டிப் பெண்ணுக்கு
கணுக்கால்வரை புடைத்து வெளித்தெரிந்த
பச்சை நரம்புகளின் முடிச்சுகளை நினைவூட்டி
துருத்தி நீண்டன
அதன் வேர்கள் மண்ணுக்குமேலும்


இலைபார்த்துக்கொண்டே
தளிராக நடந்த குழந்தைக்கால்களை
அந்த வேர்கள்தாம் ரத்தம் பார்க்கச் செய்தன
குடையாக விரிந்திருந்த கிளைகளில்
உயிரினம் எதுவும் அண்டவுமில்லை
கிளை‌களின் அந்த அடர்ந்த இருளுக்குள்
உயிர்குடிக்கும் பெரும்பேயொன்று
உலவுவதாகவும் கதைகள் இருந்தன
பூக்கவும் தெரியாத மரமதில்
சிரிக்காத மனிதர்களின் சித்திரங்களே தெரிந்தன
ஆள‌ரவமற்ற பொழுதின் துணைகளில்
அனாதைத் தவளைகளைத் துரத்திச்சேர்த்து
கருநாகங்கள் உண்டுமுடிக்கவும்
கவலைகளின்றி நிழல் தந்திருந்தது.


இப்படியாகச் சுயம்தரித்த‌ மரம்தான்
அவை போகையில் வ‌ருகையில் பார்த்துக்கொண்டிருந்து
புத்தம்புதிய பறவையும் ஆனது
இதனினும் உள்ள வசதிகள் கருதி

இப்போது நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கலாம்
பறவை வேடங்களில்
மரத்தின் பாடல்களை

Friday, August 07, 2009

காடு வாவாங்குது, ஊடு போபோங்குது.......அய்யன் க‌தை 2



"சாலை" ன்னு பொதுவாச் சொன்னா நாம அதை என்னம்போம்? "தெரு", "வீதி", "ரோடு" இதுல எதோ ஒன்னு. ஆனா நம்மூருல "சாலை" ங்கற சொல் தோட்டங் காடுகள்ல மண்சுவரு இல்லன்னா அதுகூட இல்லாம நாலு பனந்தப்பைய வெச்சு முட்டுக் கொடுத்து மேல்கூரைக்கு ஓலை போட்டு வேஞ்சிருக்கற ஒரு தங்குமிடத்தைக் குறிக்கும். காடே வேலையாப் போன சனத்துக்கு ஊருக்குள்ள ஒரு ஓட்டு ஊடு இருக்குமின்னாலும் மண்ணுலயே மனசையும், உசிரையும் வெச்சுப் பாடுபடற பகல்பொழுது பூராவும் சித்த தலையச் சாச்சுக்க, சோறு, தண்ணி உங்க இந்தச் "சாலை" தான் கதி. ராத்திரிக்குங்கூடத் தண்ணி பாச்ச, தட்டுப் புடுங்க, மாடோ, எருமையோ கன்னுப்போடறதுன்னு சிலசமயம் இங்கயே இருந்துடறதுதான் அவங்க பொழப்பு. இன்னுஞ்சிலபேருக்கு ஊடுங்கறதே சாலை மட்டுமாக்கூடப் போறதும் உண்டு. பாம்பு, பூரான், தேளுன்னு சகல சந்துக்களும் சாலையில இவங்ககூட‌ ஒன்னாப் படுத்து உசிருக்கே ஒலைவெக்கிற‌ கதைகளும்
நடக்கறதுதான்.

இந்தச் "சாலை"க் கதையை எதுக்குச் சொல்றன்னா, அந்தப் பகுதி ஊருகள்ல "மாரிமுத்து சாலைக்கு எப்படிப் போறதுங்க?" ன்னு புதுசா வார ஏவாரிகீது(வியாபாரி) யாராச்சும் கேட்டா "இப்படியே இந்த இட்டாலில (இட்டேரி) போனீங்கன்னா கொரங்காடு ஒன்னு வரும்ங்க, அதத்தாண்டுனா ஒரு பெரிய வேலாமரமொன்னு வரும், ஆடு அங்க நின்னுதுன்னா அய்யன் ஒருத்தரு நிப்பாரு, அவரக் கேளுங்க சாலையக் காட்டுவாரு, அவரு மகந்தானுங்க மாரிமுத்து" ன்னு வழி காட்டுவாங்க. இப்படி வேலாமரம், வேப்பமரம்னு அங்கங்க சிலதுக்கு "அடையாளங்களா" "முகவரிகளா" மாறிப் போறதத் தவிர பெரிசா ஒன்னுமில்லாதவங்கதான் "அய்யன்கள்". ஒன்னுமில்லைன்னு நான் சொல்றது குடும்பத்துல "அதிகாரம்", "உரிமை" "வசதி" ன்னு ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்ப‌றம் அவங்க எதையும் சுமக்கறதில்லை. எல்லாத்தையும் பசங்க கையில ஒப்படைச்சுட்டு, எடுபடற வரைக்கும் மக்களுக்கு ஒத்தாசையா சின்னச் சின்ன வேலைகள் செஞ்சிக்கிட்டுக் காலத்தை ஓட்டறதுதான். சில அய்யன்கள் ரோசங்கொறையாம "அவங்கிட்டென்ன நாங் கேக்கறது?" ன்னு மவனுக்கே எல்லாங் கொடுக்காமத் தனியா இத்தனவலக்(இத்துனூண்டு அகல) காட்டை வெச்சுக்கிட்டுப் பாடுபட்டுக்கிட்டிருக்கறதும் நடக்கும்.

நம்ம மேக்காலூட்டு அய்யனுக்கு அப்படி ரோசமெல்லாம் இல்லை. ரெண்டு மகளுகளையும் தன்னால முடிஞ்சதை செஞ்சு கரையேத்துனப்புறம் மண்ணை மவனுக்குக் கொடுத்துட்டுக் கூடவே இருந்துக்கிட்டாரு. மாமியார்க்காரியும் போய்ச்சேந்த பொறவு மருமவ அய்யனுக்கு அட்டாலி வள‌த்திக்கு மரியாதை குடுக்கறதில்லைன்னாலும், "த்தூ" ன்னு தூக்கி எறியறதில்லை. பேரன் பெருசானதுல இருந்து அய்யனுக்கு அவந்தான் பேச்சுத்தொணை, மத்தவங்களுக்கெல்லாம் அவங்கவங்க சோலி அந்த ஊட்டுல. 'ராசு' தான் அய்யனோட பேரன். அவ‌னுக்கு வச்சது கொலதெய்வத்துப் பேருன்னாலும் கூப்படறது 'ராசு' தான். இந்தமாதிரி ஊடூட்டுக்கு ஒரு 'ராசு' வேற இருப்பாங்கன்னு வைங்க. கொங்குப் பக்கத்துக் கிராமங்கள்ல இந்த 'ராசுகள்' எப்படி வந்திருப்பாங்கன்னு யாருக்குந்தெரியாம சின்னவயசிலயே நான் ஆராய்ச்சி பண்ணிப் பாத்துட்டு இருந்தேன். "அரசனாட்டமா வாழுவான்னு ஆசப்பட்டுக்கிட்டு அரசனுக்கு இன்னொரு பேரான 'ராசா'வை வெச்சுக் கூப்படனும்னு நெனச்சசிருப்பாங்க. அதச் சரியாக் கூப்படக் கத்துக்கக்கூடக் கல்வி வாசனை கெடைக்கக் கொடுத்து வைக்காத நம்ம பாட்டனுக வாயில அது 'ராசு'வா மாறிப்போயிருக்கும்" அப்படீங்கறதுதான் என்னோட ஆராய்ச்சி முடிவு. சரி அது எதுக்கு இப்ப? ந‌ம‌க்கு இப்ப‌க் க‌தை மேக்காலூட்டு ராசும், அய்ய‌னும்தான்.


ராசு ப‌ள்ளிகொட‌த்துல‌ இருந்து வ‌ந்த‌தீமே அய்ய‌ங்கிட்ட‌த்தான் வ‌ருவான். ப‌ள்ளிக்கொட‌த்துல‌ யாருக்கும் யாருக்கும் ச‌ண்டை வ‌ந்த‌து, வாத்தியார் யாரை அடிச்சாரு, க‌டையில‌ என்ன‌ வாங்கித் தின்ன‌துன்னு சொல்ற‌துக்கு ராசுகிட்ட‌ நெறைய‌வே க‌தைக‌ இருக்கும். அய்ய‌னுக்கும் ஆடு குட்டி போட்ட‌துல‌ இருந்து, போட‌ற‌துக்குப் பொகையிலை தீந்து போன‌துவ‌ரைக்கும் ராசுக்குச் சொல்ற‌துக்கும் விச‌ய‌ம் இல்லாம‌ப் போவாது.

ர‌வைச்(இரவு) சாப்பாடுகூட‌ ஊட்டுல‌ ஒன்னா உக்காந்து சாப்ப‌ட‌ற‌து அய்ய‌னும் ராசும்தான். நொங்கு வெட்டிக் கொடுக்கற‌து, எல‌ந்த‌ப் ப‌ழ‌ம் பொறுக்கி ம‌டியில‌ க‌ட்டி வெச்சிருந்து கொடுக்க‌ற‌து, எள‌நீர் சீவிக் கொடுக்க‌ற‌துன்னு ராசுக்கு அய்ய‌னோட‌ சேவையும், ப‌திலுக்கு அய்ய‌னுக்கு வெத்த‌லை எடுத்தாந்து குடுக்க‌ற‌து, முதுகு வ‌லிக்க‌ற‌ப்ப‌ மேல‌ ஏறி முதிக்க‌ற‌துன்னு ராசுவோட‌ சேவையும் ந‌ட‌க்கும். லீவுக்கு மகளுக ஊட்டுப் பேரனுக வந்தாலுங்கூட ராசு மவன் வயித்துப் பேரனுங்கற கூடுதல் பாசம் அய்யனுக்கு. எப்பவுமே ராசுவ உட்டுக்கொடுத்து ஒருவார்த்தை பேசாது அய்யன். பெரிய மக ஊட்டுப் பேரன் கொஞ்சம் மூத்தவன்ங்கறதால "இப்பிடியே ராசுவத் தூக்கித் தலைமேல வெச்சுக்கிட்டுருங்க நாங்க இனி இங்க வரவேயில்லை"ன்னு அய்ய‌னோட சமமில்லாத பாசத்தைக் குத்தஞ்சொன்னாலுங்கூட அவங்களுக்கு ஒரு கதைய எடுத்து உட்டுடும் அய்யன். "அந்தக்காலத்துல என்னை மாதிரி ஒரு அய்யந்தான் மகம் பேரனையும்,(மகன் வழிப் பேரன்)மகபேரனையும்(மகள்வழிப் பேரன்) தூக்கிக்கிட்டுக் காட்டுக்குப் போனாராமா, அப்ப மக பேரன் சொன்னானாமா 'அய்யா உங்க மாடு வருது' ன்னு,ஆனா மகம்பேரன் சொன்னானாமா 'அய்யா நம்ம மாடு வருது' ன்னு. அது காலங்கலாமா அப்படியே ஆயிட்டுது" ன்னு சொல்லித் தன்னோட பக்கத்தை நிலைநாட்டீருவாரு அய்யன். கால‌ம் இப்ப‌டியேவா போகுது? எற‌க்கை மொள‌ச்ச‌ குஞ்சு கூட்டை உட்டுப் ப‌ற‌க்க‌ற‌ மாதிரி ராசுவுக்கு அடுத்த‌டுத்த‌ வ‌குப்புக்குப் போய் மேல்ப்ப‌ள்ளிக்கூட‌மெல்லாம் போகையில‌ சோட்டாளுக‌ சாவுகாச‌ம்,(சகவாசம்) சினிமா, பாட்டுன்னு ம‌ன‌சு மாற‌மாற‌ அய்ய‌ங்கூட‌ப் பேச்சுக் கொறைஞ்சுதான் போச்சு.

ராசு அப்ப‌டி ஆயிட்டாலுங்கூட‌ அய்ய‌ன் ம‌ன‌சுல‌ ராசு எட‌ம் மாற‌வா போறான்? "எங்கூட்டு மைன‌ருக்கு இப்பெல்லாம் சோலி கூடிப்போச்சு, உக்காந்து பேச‌ நேர‌ம் எங்கிருக்குது" ன்னு வாரவ‌ங்க‌, போற‌வ‌ங்க‌கிட்ட‌ப் பெருமை பேசிக்குவாரு. ராசுக்கு அய்ய‌ன்கூட‌ ம‌ட்டுமா பேச்சுக் கொறைஞ்சு போச்சு? தாய் த‌க‌ப்ப‌ங்கூட‌வுமே அப்ப‌டியாக‌ற‌ வ‌ய‌சாப்போச்சு. ஊட்டு நெறையாச் ச‌ன‌ம் இருந்தாலுமே மீசை வர்ற‌ வ‌ய‌சுல‌ ப‌ச‌ங்க‌ நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ மாதிரி ஒட்டாம‌த் திரிய‌ற‌தாச்சு. பெத்த‌ அப்ப‌னும், அம்மாலுங்கூட‌ அதுக்கேத்த‌ அனுச‌ர‌ணையாவா எல்லா ஊட்டுல‌யும் இருந்துட‌றாங்க‌? எங்க‌ கெட்டுப் போயிருவானோன்னு க‌ண்ணுக்குத் தெரியாத‌ க‌டிவாள‌மும் கையுமா ப‌ச‌ங்க‌கிட்ட‌ நிக்க‌ற‌தாச்சு. ராசு ஊட்டுல‌யும் அப்ப‌டித்தான்னு வைங்க‌. தாந்தாம் ப‌டிக்க‌லை, ம‌க‌னாவ‌து ப‌டிக்க‌ட்டும்னு மாட்ட‌ வித்துக் க‌ன்ன‌ வித்துப் பைய‌ன் ப‌டிப்புக்குச் செல‌வு ப‌ண்ண‌த் த‌யாரா இருந்தாலும் ப‌ய‌னோட‌ ரொம்ப‌க் க‌றாருதான் அப்ப‌ங்கார‌ன். அய்ய‌னுக்கு அப்ப‌டியாகுமா என்ன‌? ராசு மேல‌ அதோட‌ பாச‌ம் என்னைக்கும் வ‌த்தாக் கெண‌றுதான்.

ராசு எப்ப‌டியாவ‌து எஞ்சினீரிங் ப‌டிச்சாகோனும்னு ப‌ன்ன‌ண்டாவ‌து பெரிய‌ ப‌ரிச்சைக்கு வெடிய‌ வெடியாப் ப‌டிச்சுக்கிட்டு இருந்தான். எல்லாருந் தூங்குன‌ பொற‌வும் சின்னாசார‌த்துல‌ லைட்ட‌ப் போட்டுக்கிட்டு இரும்புச் சேர்ல‌ உக்காந்து ப‌டிச்சிட்டுக்கிட்டிருப்பான். அப்ப‌ன், அம்மாவெல்லாம் கைகால் அச‌ரிக்கையில‌ (சோர்வுல‌) ப‌டுத்தா எந்திரிக்க‌ மாட்டாங்க‌. வெளிவாச‌ல்ல‌ க‌ட்ட‌ல‌ப் போட்டுப் ப‌டுத்திருக்க‌ற‌ அய்ய‌ந்தான் ரெண்டு மூனு த‌ர‌க்கா ஒன்னுக்குப் போக‌ எந்திரிக்க‌ற‌மாதிரி எந்திரிச்சுட்டு உள்ள‌ எட்டிப் பாத்து "சாம‌ம் ஆகிப்போச்சாட்ட‌ இருக்குது ராசு, மீனே வந்துருச்சு (இது ஒரு குறிப்பிட்ட திசையில் தோன்றும் நட்சத்திரம்), தூங்கு போ, வெடிய‌க்கால‌ நேரமே எழுப்பி உட‌ற‌ம்போ, வெடியால படிச்சாத்தேன் மண்டையிலயும் ஏறும், சும்மாவா சொன்னாங்க பொழைக்கறவன் பொழுதோட தூங்குவான் கூறுகெடறவன் கோழிகோப்புடத் தூங்குவான்னு" இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டிருப்பாரு. "அவ‌னெப்ப‌டியோ அவ‌ஞ்ச‌வுரீத்துக்குப் ப‌டிச்சிட்டுப் போறான், நீங்க‌ளுமா போய்ப் ப‌ரீச்சை எழுத‌றீங்க‌? போய்ப் ப‌டுங்க‌, சும்மா தொண்ணந்தொண்ணன்னு, தூங்கறவனயும் தூங்க உடாம‌" இது அய்ய‌னோட‌ ம‌வ‌ன். அய்ய‌ன‌ வார்த்த‌ பேச‌ற‌துக்க‌ள‌வா (திட்ட‌ற‌துக்கு) பெச்சீட்ட‌த் தொற‌ந்துட்டு மூடிக்குவாரு அய்யன் மவன். "சேரிச்சேரி கெழ‌வ‌ம் பேச்சு கிண்ணார‌க்கார‌னுக்கேறுமா?" ன்னு ராச‌ப்பாத்துச் சொல்லுவாரோ இல்லை த‌ன் ம‌வ‌னுக்குச் சொல்லுவாரோ சொல்லீட்டு அய்ய‌னும் போய்த் தூங்கீருவாரு.


ராசு எப்ப‌த் தூங்குவானோ தெரியாது, காலைல‌ எந்திரிக்க‌வே முடியாம‌ க‌ண்ணுல‌ ஒரே எரிச்ச‌லா இருக்கும். சுத்தீமு எல்லாரும் பேச‌ற‌து கேட்டாலும் உன்ன‌ஞ் சித்தே ப‌டுத்துக்க‌லாமுன்னு ப‌டுத்திருப்பான்.
பொழுதோட‌ வ‌ராத க‌னிஞ்ச‌ சொல்லா அப்ப‌னுக்குக் காலைல‌ வ‌ர‌ப்போவ‌து? ம‌ன‌சுல‌ பாச‌ம் இருந்தாலும் வார்த்தைல‌ வெண்ணை பூச‌த் தெரிஞ்சா அவ‌ங்க‌ பொழ‌ப்பெல்லாம் ஏன் இப்ப‌டி இருக்க‌ப்போவுது? "எந்திரீடா ராசு, ம‌ணி ஏழாவுது, மேக்க‌ போன‌ ப‌ஸ்சு கெழ‌க்க‌ வார‌துக்குள்ள‌ கெள‌ம்போனும‌ல்ல‌? இப்ப‌டித் தூங்கியாடா நீ போய்ப் ப‌ரீச்சை எழுத‌ப் போறே?" ன்னு வ‌ழ‌க்க‌ம்போல‌ பேசீட்டு வேலைய‌ப் பாக்க‌ப் போயிருவாரு அப்ப‌ன். அய்ய‌ந்த்தான் காலைல‌யும் ராசு கால்மாட்டுல‌ நின்னுக்கிட்டு "ராசு, எந்திரிடா சாமி, சைக்கிள‌த் தொட‌ச்சு வெச்சிருக்க‌றேன், அழுத்திக்கிட்டுப் போனாத்தான‌ கெழ‌க்க‌ வார‌ ப‌ஸ்ச‌ப் புடிக்க‌ச் செரியா இருக்கும்?" னு சொல்லிக்கிட்டிருக்கும்.


ஆச்சு, ந‌ம்ம‌ ராசுவும் காலேஜு முடிச்சு,எஞ்சீனீர் ஆவி, நல்ல வேலையும் கெடைச்சு, வெளிநாட்டுக்கும் வ‌ந்தாச்சு. அய்ய‌ன் என்ன‌ ஆனாருங்க‌றீங்க‌ளா? இன்னமும் க‌த‌ர்க்க‌டைப் பெச்சிட்டு ஒன்ன‌ப் போத்திக்கிட்டு அதேமாதிரி ஒரு க‌ட்ட‌ல்ல‌ ப‌டுத்துக்கிட்டுத்தான் இருக்க‌றாரு. எப்ப‌வாவ‌து ந‌ம்ம‌ ராசுகூட‌ போன்ல‌ ஒரு ப‌ழ‌மை பேசுவாரு. அதுங்கூட‌ அப்ப‌ங்கார‌ரு ப‌க்க‌த்துல‌ மொழிபெய‌ர்ப்பு வேலை செய்யோனும். காது கேக்காத‌ அய்ய‌னுக்கு ராசு சொல்ற‌து புரியுமான்னு தெரியாது. ஆனா அய்ய‌ஞ் சொல்ற‌து எல்லாருக்குமே புரியும், ஏன்னா அவ‌ரு இப்பெல்லாம் ஒன்னையேதான‌ திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டிருக்காரு? "என‌க்கென்ன‌ சாமி? காடு(சுடுகாடு) வாவாங்குது, ஊடு போபோங்குது. நீங்கெல்லா ந‌ல்லா இருந்தீங்க‌ன்னாச் ச‌ரி". இப்ப‌டி எத்த‌னை ராசுக்க‌ளோ? எத்த‌னை அய்ய‌ன்க‌ளோ? சீமையுட்டுச் சீமை வாழுற‌ ராசுக்க‌ளையும், செங்காட்டுச் சீமைய‌றிஞ்ச‌ அய்ய‌ன்க‌ளையும் இன்ன‌மும் எணைச்சுக்கிட்டிருக்க‌ற‌து "ஒற‌வு"ங்க‌ற‌ மூனெழுத்துத்தானே?